கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பால்டா சட்டசபைத் தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி எண் 144-ல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பா.ஜ.வின் ‘தாமரை’ சின்னத்துக்கான பட்டன் டேப் ஒட்டி மறைக்கப்பட்டதாக பா.ஜ. குற்றஞ்சாட்டியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோல், ஓட்டுச்சாவடி எண் 170 மற்றும் 189-லும்கூட ‘தாமரை’ பட்டன் மறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பால்டா தொகுதியில் டி.எம்.சி. சார்பில் ஜஹாங்கிர் கான், பா.ஜ. சார்பில் தேபாங்ஷு பாண்டா போட்டியிடுகின்றனர்.
பா.ஜ. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா, வாக்காளர்கள் பா.ஜ.வுக்கு வாக்களிப்பதை திட்டமிட்டு தடுக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் உடனடியாக மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சில இயந்திரங்களில் டேப் ஒட்டப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில், பட்டன்கள் சேதப்படுத்தப்பட்டதோ அல்லது மறைக்கப்பட்டதோ உறுதியானால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு மறு ஓட்டுப்பதிவும் நடத்தப்படும் என மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் தெரிவித்தார்.





