செவ்வாய்க்கிழமை மாலை பெங்களூரு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததாக கூறப்படுகிறது. பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 29 முதல் மே 4 வரை பெங்களூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பே தெரிவித்திருந்தது. காலை வெயில் கடுமையாக இருந்த நிலையில், மாலை 4 மணிக்குப் பிறகு கருமேகங்கள் சூழ்ந்து, 5 முதல் 6 மணி வரை மழை தீவிரமடைந்தது.

சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சுவரை ஒட்டிய நடைபாதையில் அமர்ந்து வியாபாரம் செய்தவர்கள் மற்றும் சுவர் அருகில் நின்றிருந்த மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் 5 வயது சிறுமி என ஏழு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

முதல்வர் சித்தராமையா மற்றும் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பின்னர் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.