தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புடைய புகாரின் அடிப்படையில், தவெக தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து தமிழக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன், மாநில காவல் துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.

சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜய் பேசியபோது, பெற்றோர்கள் தவெகவின் “விசில்” சின்னத்துக்கு ஓட்டுப்போட குழந்தைகள் வலியுறுத்த வேண்டும் என கூறியதாக கமிஷன் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற பேச்சு ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அரசியல் லாபத்துக்காக குழந்தைகளை தூண்டிவிடுவது சட்டவிரோதம் எனக் கூறி நடவடிக்கை கோரி புகார்கள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கமிஷன் கடிதத்தில், சமூக வலைதளங்களில் பரவியுள்ள தொடர்புடைய வீடியோக்களை அகற்ற வேண்டும் என்றும், விஜய் மட்டுமின்றி அவரது கட்சியின் பிரசார குழுவினர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் கமிஷனருக்கும் தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.