இந்தியாவின் கடல்சார் தாக்குதல் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) மற்றும் இந்திய கடற்படை இணைந்து குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை (NASM-SR) அமைப்பின் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக அறிவித்துள்ளன.

ஒடிசா அருகே வங்காள விரிகுடா கடற்கரைக்கு அப்பால், கடற்படையின் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது வான்வழி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைச் சரிபார்க்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

சோதனையின் போது ஒரே ஹெலிகாப்டரிலிருந்து மிகக் குறுகிய நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவும் திறனும், கடற்பரப்பில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறனும் நிரூபிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியது.

இந்த ஏவுகணை சுமார் 55 கி.மீ வரை செல்லக்கூடியது; ஏவிய பின் இலக்கைத் தானாகத் தேடி தாக்கும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சோதனையை டி.ஆர்.டி.ஓ-வின் மூத்த விஞ்ஞானிகள், கடற்படை மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

இந்த வெற்றிகரமான சோதனைக்காக டி.ஆர்.டி.ஓ, கடற்படை மற்றும் விமானப்படையினரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி, இது பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேலும் மேம்படுத்தும் என கூறினார்.