ஜாதி, மதமற்றவர் என்பதற்கு எந்தச் சான்றிதழும் தேவையில்லை; அது ஒருவரின் நடத்தை வழியாகவே வெளிப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நடிகர் பார்த்திபன், தன்னை ஜாதி மற்றும் மத சார்பற்றவர் எனக் குறிப்பிடும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினார். இதை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்குமாறு தாசில்தாருக்கு முன்பே உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில், ஏப்ரல் 27 அன்று சோழிங்கநல்லூர் தாசில்தார் பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்கினார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பார்த்திபன் நேரில் ஆஜராகி, “அர்த்தமுள்ள சமுதாயம் உருவாக வழி செய்ததற்கு நன்றி” என நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, இத்தகைய சான்று பெற வேண்டிய அவசியமே இல்லை என்றும், பொதுவாக தாசில்தாருக்கு இப்படிப் பட்ட சான்று வழங்க அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார். இரு நீதிபதிகள் அமர்வு முன்பு வழங்கிய உத்தரவை அடிப்படையாகக் கொண்டே இச்சான்று வழங்க உத்தரவிடப்பட்டது என்றும், இது விளம்பரத்திற்குப் பயன்படலாம்; ஆனால் ஜாதி, மதமற்ற வாழ்க்கை சான்றிதழால் அல்ல, நடைமுறையால் தான் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பார்த்திபன், “நல்லவர் என்று சொல்லுவதற்குக் கூட சான்றிதழ் கேட்கப்படுகிறது” என கூறினார். இதையடுத்து நீதிமன்றம் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.