வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பித் தருமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸ் 3மிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயரும், இந்திய வம்சாவளியினருமான சோஹ்ரான் மம்தானி தெரிவித்தார்.
சார்லஸ் 3ம் மன்னரும் ராணி கேமிலாவும் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில், 2001 செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அந்த நிகழ்ச்சியில் மம்தானி மன்னரை சந்தித்தார். சந்திப்புக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்துவேன் என்று கூறினார். ஆனால், சந்திப்பின்போது இதுபற்றி பேசப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை கருத்து தெரிவிக்க மறுத்தது. 105.6 காரட் எடையுள்ள கோஹினூர், 1849 லாகூர் உடன்படிக்கையின் மூலம் மகாராஜா துலீப் சிங்கிடமிருந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது; தற்போது அது ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு லண்டன் கோபுரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.





