மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி தொடர்ந்த அவதூறு தொடர்பான வழக்கை, 2046ல் மட்டுமே பட்டியலிட வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் “அகங்காரங்களின் மோதல்” ஆக மாறி நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தெற்கு மும்பையில் உள்ள குடியிருப்பு நலச்சங்கத்துக்கு எதிராக, தாரிணிபென் (90) மற்றும் அவரது மகள் தேசாய் (57) ஆகியோர் 2015ல் மனுத் தாக்கல் செய்தனர். சங்க உறுப்பினர் கில்கில்ராஜ் பன்சாலி உள்ளிட்டோரின் செயல்களால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி, ரூ.20 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரினர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வழக்கில், இருதரப்பினரையும் சமாதானப்படுத்த நீதிமன்றம் பலமுறை முயன்றதாக கூறப்படுகிறது. எதிர்தரப்பினர் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தும், அதை தாரிணிபென் ஏற்காததால் விசாரணை தொடர்ந்தது.

சமீபத்தில் நீதிபதி ஜிதேந்திர ஜெயின் முன் வழக்கு வந்தபோது, வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள மனுதாரர்களின் தனிப்பட்ட ஈகோ நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறது என்றும், அவசரமாக விசாரிக்க வேண்டிய பல வழக்குகள் காத்திருக்கும் நிலையில் இத்தகைய பிடிவாதம் நீதிமன்ற நடைமுறையை பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மூத்த குடிமக்கள் என்பதற்காக முன்னுரிமை அளிக்க முடியாது என்றும், 20 ஆண்டுகளுக்குப் பின் 2046ல் விசாரிக்க பட்டியலிட வேண்டும்; அதற்கு முன் எக்காரணம் கொண்டும் விசாரிக்கப்படாது என்றும் உத்தரவிட்டார்.