புதுடில்லி: மத்திய அரசின் என்.பி.எஸ். ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ‘நிலையான மருத்துவப்படி’ இனி ரசீதுகள்/பில்ல்கள் இன்றி தானியங்கி முறையில் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
காலதாமதத்தை தவிர்க்கவும், ஆவணங்களை திரட்டி அலுவலகங்களுக்கு அலைவதை குறைக்கவும் இந்த நேரடி பண பரிவர்த்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட சரிபார்ப்பு நடைமுறை மூலம் பணம் விடுவிப்பதில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் கணக்கீட்டு பிழைகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணைப்படி, செப்டம்பர்–நவம்பர் காலத்திற்கான தொகை டிசம்பர் முதல் வாரத்தில் செலுத்தப்படும்; டிசம்பர்–பிப்ரவரி காலத்திற்கான தொகை மார்ச் முதல் வாரத்தில் வரவு வைக்கப்படும். மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகம் தகுதியுள்ளவர்களை சரிபார்த்து வங்கிகளுக்கு தகவல் அனுப்பும்; அதன் பின்னர் வங்கிகள் தானாகவே பணத்தை செலுத்தும்.
மருத்துவப்படி தடையின்றி கிடைக்க, ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ‘ஆயுள் சான்றிதழ்’ சமர்ப்பிக்க வேண்டும். இதை தவறினால், டிசம்பர் மாதம் முதல் மருத்துவப்படி நிறுத்தப்படும். ஓய்வூதியதாரர் மறைந்த பின் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர் (மனைவி/கணவர்) இதைப் பெறலாம்; அனுமதி படிவத்தில் பெயர் இருந்தால் இறப்பு சான்றிதழ் மட்டும் போதும், இல்லையெனில் புதிய அனுமதி பெற வேண்டும்.
மேலும், ஓய்வூதியதாரர்கள் ‘நிலையான மருத்துவப்படி’யை நிறுத்தி எப்போது வேண்டுமானாலும் ‘சி.ஜி.ஹெச்.எஸ்.’ மருத்துவ திட்டத்திற்கு மாறலாம். ஒருமுறை அந்த திட்டத்தை தேர்வு செய்தால், அதன் விதிகளே நடைமுறையில் இருக்கும்; அதன் பிறகு மாதாந்திர மருத்துவப்படி வழங்கப்படாது.





