புதுடில்லி: அந்தமான்–நிக்கோபர் தீவுகளில் முன்மொழியப்பட்டுள்ள ‘கிரேட்டர் நிக்கோபர் திட்டம்’ குறித்து காங்கிரஸ் எம்.பி.வும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தத் திட்டத்தை அவர் “நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல்” என குற்றம்சாட்டினார்.

₹81,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் கீழ் சர்வதேச கொள்கலன் மறு ஏற்றுமதி முனையம், பயணியர் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான பசுமை விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம் மற்றும் புதிய நகரமைப்பு ஆகியவை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளுக்கு அருகாமையில் இருப்பதை பயன்படுத்தி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்தவும், வெளிநாட்டு மறு ஏற்றுமதி மையங்களின் சார்பை குறைக்கவும் திட்டம் உதவும் என மத்திய அரசு விளக்குகிறது.

தீவுகளுக்கு சென்றிருந்த ராகுல், அங்கு அரிய வகை மற்றும் மிகப் பழமையான மரங்கள் நிறைந்த காடுகளை பார்த்ததாக கூறினார். மேலும், பழங்குடியினர் உள்ளிட்ட உள்ளூர் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கோடிக்கணக்கான மரங்கள் வெட்டப்படக்கூடும் என்றும், சுமார் 160 சதுர கி.மீ. பரப்பளவிலான மழைக்காடுகள் அழிவை நோக்கி தள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது வளர்ச்சி அல்ல; வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் பேரழிவு என கூறிய அவர், பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நாட்டின் பல தரப்பினரும் அங்கு நடப்பதை அறிந்தால் மட்டுமே இது தடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.