நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. உடன் கூட்டணி அமைப்பதை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் விரும்பியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் அந்த வாய்ப்பை ஆதரித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தி.மு.க. கூட்டணியையே தொடர வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உறுதியாக இருந்ததாக தகவல். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி ஏற்பட்டதாகவும், பின்னர் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மூலம் பேச்சு சுமூகமாகி காங்கிரஸ் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
கூட்டணியில் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளைப் பெற முடியாதது குறித்து ராகுல் அதிருப்தியடைந்ததாகவும், ஆரம்பத்தில் பிரசாரம் செய்ய மறுத்ததாகவும் தகவல். தொடர்ந்து வலியுறுத்திய பின்னர் தமிழகம் வந்த அவர், காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் ஆறு இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்ததாகவும், எந்த மேடையிலும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்த பிரசாரத்தில் ராகுல் பேச்சை மொழிபெயர்க்கும் போது செல்வப்பெருந்தகை தவறாக மொழிபெயர்த்ததாகவும், அதனால் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு அவரை வேண்டாம் என ராகுல் தெரிவித்ததாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. பின்னர் தொலைபேசியில் பேசிய ராகுல், “நல்ல வாய்ப்பை கெடுத்தது நீங்கள்” என கடுமையாகக் கூறியதாகவும், அமைப்பு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தேர்தல் முடிந்த நிலையில் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்வு பணியை டெல்லி மேலிடம் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.




