கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ.) ராணுவ அமைச்சர்கள் மாநாட்டின் இடையே, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு அமைச்சர் டாங் ஜுனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது மற்றும் மேற்காசிய போர் தொடர்பான நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எஸ்.சி.ஓ. மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட 10 உறுப்புநாடுகளின் ராணுவ அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலுாசோவையும் ராஜ்நாத் சிங் சந்தித்து, ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு கொள்முதல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ஏற்கனவே மூன்று ‘எஸ்-400’ அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், நான்காவது அமைப்பு விரைவில் வரலாம் என்றும், ஐந்தாவது அமைப்பு நவம்பருக்குள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவ அமைச்சர்களையும் ராஜ்நாத் சிங் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.





