ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது “அணு ஆயுதம்” என அச்சுறுத்தும் பேச்சுகளால் இந்தியா அஞ்சவில்லை; அவற்றை புறந்தள்ளியே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புதுடில்லியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், இந்தியா மீது தாக்குதல் நடத்தியவர்களை குறிவைத்து தாக்கியதாக கூறினார். இந்த நடவடிக்கை இந்தியாவின் திறன் குறைவால் நிறுத்தப்படவில்லை; நமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே தன்னிச்சையாக நிறுத்தியதாகவும் அவர் வலியுறுத்தினார்.

தேவைப்பட்டால் முழு அளவிலான போரில் ஈடுபடவும் இந்தியா தயாராக இருந்ததாகவும், அமைதி காலத்தில் மட்டுமல்லாது விரிவான போர்க்கால சூழல்களிலும் ராணுவம் தயாராக இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதம் தொடர்பாக, பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் சுட்டினார். ஆப்பரேஷன் சிந்தூர் முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் இனி வெறும் தூதரக அறிக்கைகளில் மட்டும் முடிவடையாது என்ற செய்தி உலக நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறினார்.

மேலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை இந்தியா கவனித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் இருப்பதையும், பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் மையமாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.