15 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க அனுமதித்த தன் முந்தைய உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சிறுமி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஏப்.24 அன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தை தொடர வற்புறுத்துவது அவரது நலன்களை புறக்கணிப்பதாகும் எனக் குறிப்பிட்டு, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் செயல்முறை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில், 30 வாரங்களை கடந்த நிலையில் கருக்கலைப்பு செய்வது சிறுமிக்கும் கருவுக்கும் ஆபத்தாக இருக்கலாம் என்றும், குழந்தையை பெற்றெடுத்து தத்து கொடுக்கலாம் என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, பாலியல் வன்கொடுமையால் ஏற்பட்ட கர்ப்பத்தை கலைப்பதில் கால வரம்பு இருக்கக் கூடாது எனக் கூறியது. சட்டம் மாறிவரும் காலத்திற்கேற்ப அமைய வேண்டும் என்றும், தனிநபர் விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறோம்; மத்திய அரசும் அதையே செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த முடிவில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை; கருக்கலைப்பு குறித்து தீர்மானிக்கும் உரிமை பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்திற்கே உண்டு என அமர்வு கூறியது. சிறுமிக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி, சிறுமியின் மனநிலை மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சீராய்வு மனுவை நிராகரித்தது.





