சென்னை: ஓட்டு எண்ணிக்கையின் போது திமுக குளறுபடிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு அளித்துள்ளது.

தவெக இணை பொதுச் செயலர் நிர்மல்குமார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனுவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணிக்கையில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கலாம் என குற்றம்சாட்டினார்.

எண்ணிக்கை மையங்களில் கூடுதலாக மத்திய பாதுகாப்புப் படையினரை பணியமர்த்த வேண்டும் என்றும், தபால் ஓட்டுகள் யாரிடமிருந்து எங்கிருந்து பெறப்படுகின்றன என்பதைக் கட்டாயமாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.

மேலும் தபால் ஓட்டு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்து அதை கட்சிகளுக்கு வழங்க வேண்டும், தபால் ஓட்டுகளை ஸ்கேன் செய்ய வேண்டும் எனவும் தவெக வலியுறுத்தியது. தபால் ஓட்டுகள் எண்ணி முடிந்த பிறகு, இயந்திரத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கையின் கடைசி இரண்டு சுற்றுகளையும் தொடர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்தார்.