வாஷிங்டன்: அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட உள்ள சிறப்பு பாஸ்போர்ட்டுகளில் அதிபர் டொனால்டு டிரம்பின் புகைப்படத்தை சேர்க்கும் திட்டத்திற்கு, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நினைவு வெளியீட்டு பாஸ்போர்ட்டுகளில் டிரம்பின் தங்க நிற கையெழுத்தும் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சியை வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சுதந்திர தின நினைவு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டாலர் நோட்டுகளில் டிரம்பின் கையெழுத்தை சேர்க்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. இதற்கான முயற்சியை நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 கேரட் தங்க நாணயத்தை வெளியிட மத்திய கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை பதவியில் இருக்கும் எந்த அமெரிக்க அதிபரின் படமும் அமெரிக்க பாஸ்போர்ட்டில் இடம்பெற்றதில்லை என்பதால், இந்த திட்டம் மரபுக்கு மாறானது என ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது.




