ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி தனது பெயரை சூட்டலாம் என பரிந்துரைக்கும் சமூக வலைதள பதிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அதில், அந்த நீர்வழியை “டிரம்ப் ஜலசந்தி” என்று குறிப்பிடும் வரைபடமும் வெளியிடப்பட்டதால், இணையத்தில் கேலிச் விமர்சனங்கள் எழுந்தன.

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல் நடந்ததையடுத்து, உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரான் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கப்பல்களிடமிருந்து இவ்வாறு கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி எதிர்ப்பு நிலவுவதால், அந்த வழித்தடத்தில் இயல்பான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்து, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு இது மிக முக்கியமான கடல்வழியாகும்.

இந்த ஜலசந்தி மிகவும் குறுகியதாகும்; மிகக் குறுகிய பகுதியில் அகலம் சுமார் 33 கி.மீ. மட்டுமே. அதிலும் கப்பல்கள் செல்லும் பாதை சுமார் 3 கி.மீ. அளவிலேயே உள்ளது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் 20% இந்த வழித்தடம் வழியாக நடைபெறுகிறது. “ஹார்முஸ்” என்ற பெயர், 13 முதல் 16ம் நூற்றாண்டுகளில் செல்வாக்குடன் திகழ்ந்த பண்டைய துறைமுக நகரமான ஹார்முஸ் நகரிலிருந்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது.