இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 657 பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவுக்கு திருப்பி அளித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 14 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹117 கோடி) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. இதில் சத்தீஸ்கரின் அவலோகிதேஸ்வரர், அபய முத்ரா புத்தர், நடன விநாயகர் உள்ளிட்ட அரிய சிலைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் குறிப்பிடத்தக்கதாக 7.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள சிவப்பு மணற்கல் புத்தர் சிலையும் உள்ளது. இந்த ஒப்படைப்பு, கலாசார பாரம்பரிய பாதுகாப்பில் இந்தியா–அமெரிக்கா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
பழம்பொருள் கடத்தல்காரர் சுபாஷ் கபூர் மற்றும் தண்டனை பெற்ற கடத்தல்காரர் நான்சி வீனர் ஆகியோருடன் தொடர்புடைய சர்வதேச கடத்தல் கும்பலைக் குறித்த தொடர் விசாரணைகளின் மூலம் இவை மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட கலைப்பொருட்களை மீட்டு தாயகம் கொண்டுவரும் முயற்சிகள் தொடரும் என மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் எல் பிராக் ஜூனியர் தெரிவித்துள்ளார்.





