ஆமதாபாத்: டீப் பேக் மூலம் நடந்த ஆதார் மோசடி அம்பலம்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏற்றுமதி–இறக்குமதி தொழில் செய்யும் தொழிலதிபருக்கு கடந்த இரண்டு நாட்களாக வங்கியிலிருந்து வரும் ஓ.டி.பி. குறுஞ்செய்திகள் வராமல் நின்றது. சந்தேகமடைந்த அவர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சைபர் குற்றப் பிரிவு விசாரணை தொடங்கியது.

விசாரணையில், குற்றவாளிகள் தொழிலதிபரின் ஆதார் விவரங்களையும் புகைப்படங்களையும் சேகரித்து, ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் அவரைப் போலவே தோற்றமளிக்கும் ‘டீப் பேக்’ வீடியோவை உருவாக்கியதாக போலீசார் கூறினர்.

அந்த வீடியோவை இ-சேவை மையத்தில் உள்ள ஆதார் கருவியில் காட்டி, நேரில் நபர் இருப்பது போல ஆதார் மென்பொருளை நம்ப வைத்ததாகவும், இதன் மூலம் ஓ.டி.பி. இல்லாமலேயே தொழிலதிபரின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி, தங்களது எண்ணை இணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ‘ஜியோ பேமென்ட்ஸ்’ ஆன்லைன் வங்கியில் கணக்கு தொடங்கி ரூ.25,000 கடன் பெற்றதாகவும், தொழிலதிபரின் டிஜிட்டல் லாக்கரை அணுகி பல்வேறு ஆவணங்களை எடுக்க முயன்றதாகவும் போலீசார் கூறினர்.

இந்த வழக்கில் கனுபாய் பார்மர், ஆசிஷ் வானந்த், முகமது கைப் படேல், தீப் குப்தா ஆகியோர் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இவர்களில் ஒருவர் இ-சேவை மையம் நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.