2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.2.43 லட்சம் கோடியாக புதிய உச்சத்தை எட்டியதாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வசூலை விட 8.7% அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் அறிக்கைப்படி, இதுவரை பதிவான மாதாந்திர ஜிஎஸ்டி வசூல்களில் இது மிக உயர்ந்த தொகை. உலகளாவிய நிச்சயமற்ற சூழல்கள் நீடித்தாலும், வணிக நடவடிக்கைகள் பாதிப்பின்றி நடந்ததை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.

உள்நாட்டு வருவாய் 4.3% உயர்ந்து ரூ.1.85 லட்சம் கோடியாகவும், இறக்குமதிகளின் மூலம் கிடைக்கும் வருவாய் 25.8% உயர்ந்து ரூ.57,580 கோடியாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிகளின் மீதான ஜிஎஸ்டி உயர்வுதான் மொத்த வசூல் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி வருவாய் பகிர்வில் தமிழகத்துக்கு ரூ.8,413 கோடி வழங்கப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டை விட 46% அதிகம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீப மாதங்களின் ஜிஎஸ்டி வசூல்: ஏப்ரல் 2026 (ரூ.2.43 லட்சம் கோடி), மார்ச் 2026 (ரூ.2.01 லட்சம் கோடி), பிப்ரவரி 2026 (ரூ.1.83 லட்சம் கோடி), ஜனவரி 2026 (ரூ.1.93 லட்சம் கோடி), டிசம்பர் 2025 (ரூ.1.74 லட்சம் கோடி), நவம்பர் 2025 (ரூ.1.70 லட்சம் கோடி).