புதுடில்லி: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைந்தால் தங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என வங்கதேச பார்லிமென்டில் ஒரு எம்பி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜ தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், வங்கதேசத்தின் தேசிய குடிமக்கள் கட்சி எம்பி அக்தர் ஹொசைன், இக்கருத்துக்கணிப்பு முடிவுகள் தங்களுக்கு “கவலை” அளிப்பதாக பார்லிமென்டில் கூறியதாக அந்த வீடியோவில் இடம்பெறுகிறது. பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படும் வங்கதேச மக்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்ப வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்படி நடந்தால் வங்கதேசத்தில் பெரிய அளவில் அகதி நெருக்கடி உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம், மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளதாக பாஜ முன்வைத்து வந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
மேலும், சட்டவிரோத நுழைவோரை கண்டறிந்து வெளியேற்றும் நோக்கில் மத்திய அரசு எஸ்ஐஆர் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் பலர் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பியதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.





