சென்னையில் வாடகை கார் ஓட்டுநருக்கு ரூ.4.70 கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துமாறு நோட்டீஸ் வந்ததாக கூறி, அவர் மாநகர போலீசில் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமலநாதன், கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், வாடகை கார் ஓட்டி மாதம் சுமார் ரூ.25,000 வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த ஊரில் உள்ள வீட்டு முகவரிக்கு இந்த நோட்டீஸ் வந்ததாகவும், இதுகுறித்து ஜிஎஸ்டி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவரது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை விவரங்களை பயன்படுத்தி திருப்பூர் மற்றும் ஓசூரில் “கமல் என்டர்பிரைசஸ்” என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அந்த நிறுவனத்தின் ஜிஎஸ்டி தொடர்பான நடவடிக்கையாகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இதற்கு தாங்கள் எதுவும் செய்ய முடியாது; போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மர்ம நபர்கள் தனது அடையாள விவரங்களை தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாக கூறி, அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.