மாறிவரும் உலக மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு, இந்தியாவில் ராணுவ தளவாடங்களை கூட்டாக உற்பத்தி செய்ய இந்தியா மற்றும் இத்தாலி ஒப்பந்தம் செய்துள்ளன.

புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அரசுமுறை பயணமாக வந்த இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சர் குயிடோ கிராஸேட்டோ இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், 2026–27 ஆண்டுகளுக்கான “பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு திட்டம்” வெளியிடப்பட்டது. இதில், ‘சுயசார்பு இந்தியா’ முன்னெடுப்பு மற்றும் இத்தாலியின் ராணுவ ஒத்துழைப்பு முயற்சிகளை இணைத்து, இரு நாடுகளுக்கும் பயன் தரும் வகையில் ராணுவ தொழில் கூட்டமைப்பை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் நிலவும் போர் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அமைதி, ஸ்திரத்தன்மை, சுதந்திரம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய அடிப்படைகளில் இருநாட்டு உறவு நீடிக்கிறது என பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

கடல்சார் வர்த்தக பாரம்பரியம் கொண்ட இரு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பில் ஒருமித்த கருத்தை மீண்டும் வலியுறுத்தின. குறிப்பாக, குருகிராமில் உள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான தகவல் ஒருங்கிணைப்பு மையம் (IFC-IOR) மூலம் முக்கிய தகவல்களை பரஸ்பரம் பகிர்வதற்கும் சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.