கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
ஜனவரி 12 முதல் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா இடங்களுக்கு கியூஆர் கோடு முறையில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதனால் நெரிசல் அதிகரித்து உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, பழைய முறையில் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள போக்குவரத்து மாற்றத்தை முன்பிருந்த முறைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வனத்துறை நுழைவுவாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மூச்சிக்கல் பகுதியில் மறியலிலும் ஈடுபட்டதால் வாகன வரிசை நீண்டது.
5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டத்தால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நின்றதாக தெரிவிக்கப்பட்டது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானனர்.
மாவட்ட வன அலுவலர் அரவிந்த், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா, டிஎஸ்பி யுவப்பிரியா ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், தூண்பாறை, குணா குகை, கோரபைன் மரக்காடுகள், சதுகக்கம் பகுதிகளுக்கு 2 நாட்கள் கட்டணமின்றி செல்லலாம் என்றும், பிரையண்ட் பூங்கா மற்றும் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களுக்கு கட்டணம் செலுத்தி பார்வையிடலாம் என்றும் தெரிவித்தார்.





