மியான்மரில் நோபல் பரிசு பெற்ற ஜனநாயக ஆதரவு தலைவர் ஆங் சான் சூச்சியின் சிறைத் தண்டனையை இரண்டாவது முறையாக குறைத்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
2021-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சூச்சி தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கழகம்’ ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பின்னர் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளிலும், நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளிலும் சூச்சிக்கு மொத்தம் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சமீபத்தில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் மூலம் அந்த தண்டனை 27 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தற்போது அவர் 80 வயதை எட்டியதை முன்னிட்டு கருணை அடிப்படையில் மேலும் 9 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சூச்சி இன்னும் 18 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். மீதமுள்ள காலம் முழுவதும் நிறைவேற்றப்பட்டால், அவர் 98 வயது வரை சிறையில் இருப்பார் என்ற நிலை உருவாகிறது.





