கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வருகை அதிகரிப்பதைத் தொடர்ந்து மே 1 முதல் ஊட்டியில் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. புதிய ஏற்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் படி, ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்கள் காட்டேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சேலாஸ், கெந்தளா, காட்டேரி அணை, கேத்தி, பாலாடா, லவ்டேல் வழியாக வந்து, மஞ்சனக்கொரை மற்றும் பர்ன்ஹில் வழியாக ஊட்டி நகருக்குள் நுழைய வேண்டும்.
பால், பெட்ரோலியப் பொருட்கள், காஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர, பிற கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊட்டிக்குள் நுழைய அனுமதி இல்லை.
மேலும் கல்லட்டி மலைப்பாதை வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் உள்ளூர் ஓட்டுநர் உரிமம் உள்ள வாகனங்களுக்கு அனுமதி உண்டு. மற்ற பதிவெண் கொண்ட வாகனங்கள் உள்ளூர் போலீசாரை தொடர்பு கொண்டு நுழைவுச் சீட்டு பெற்று கல்லட்டி மலைப்பாதையில் இயக்கலாம்.





