ஈரான் தொடர்பான போர் காரணமாக பாகிஸ்தான் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த முன்னேற்றம் பின்னடைவை எதிர்கொள்வதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் இதை கூறினார்.
பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதிலிருந்து உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்ததால், பாகிஸ்தானின் இறக்குமதி செலவு பெரிதும் அதிகரித்ததாக அவர் விளக்கினார். போருக்கு முன் வாராந்திர எண்ணெய் இறக்குமதி செலவு ரூ.2,850 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.7,600 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறினார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரத்தில் பெட்ரோலிய பயன்பாடு குறைந்துள்ளதாகவும், விலை உயர்வை தினசரி கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த மாதம் 11-ம் தேதி இஸ்லாமாபாத்தில் ஈரான்–அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து அமைச்சரவை சகாக்களுக்கு அவர் விளக்கமளித்தார். அந்த முயற்சிகளுக்காக ராணுவ தளபதி அசிம் முனீர் மற்றும் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர் ஆகியோரின் ஒருங்கிணைப்பை பாராட்டினார்; இதன் விளைவாகவே போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருப்பதாகவும் கூறினார்.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த ஷெரீப், ஈரான்–அமெரிக்கா மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். மேற்காசியாவில் அமைதியை மீட்டெடுக்கவும் பதற்றத்தை தணிக்கவும் தன் அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.





