ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில், புத்த பூர்ணிமா விழா வியாழக்கிழமை (மே 1) காலை தொடங்கியது. ‘சாய் குல்வந்த்’ அரங்கில் நடைபெறும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
காலை 8 மணிக்கு வேத பாராயணத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தொடர்ந்து விழா அறிமுகம், புத்த துறவிகள் ஊர்வலம், விளக்கு ஏற்றுதல் மற்றும் துறவிகளின் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் புத்த துறவி கெம்போ சம்டுக் லாமா உரையாற்றினார்; அதன் பின் பஜனை மற்றும் மங்களாரத்தி நடைபெற்றது.
விழாவிற்காக ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மற்றும் புத்த துறவிகள் பெருமளவில் புட்டபர்த்திக்கு வந்துள்ளனர். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர் புத்தர் சிலையை திறந்து வைத்தார்.
மே 1 மாலை நிகழ்ச்சிகளில் வேதம், தம்மிக்கா கலபுகே உரை, பால விகாஸ் சிறுவர்களின் நடனம், தெய்வீக சொற்பொழிவு மற்றும் பஜனை-மங்களாரத்தி இடம்பெறுகிறது.
மே 2 அன்று காலை வேதம், பாரம்பரிய நாட்டுப்புற இசைக்குழு ஊர்வலம், ‘ஓம் மணி பத்மே ஹும்’ மந்திரத்தின் கூட்டு முழக்கம், ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் ஹிமாச்சல பிரதேச தலைவர் பேராசிரியர் யோகிந்தர் வர்மா உரை, புத்த தரிசனம் குறித்த காணொளி மற்றும் பஜனை-மங்களாரத்தி நடைபெறுகிறது. மாலை வேதம், ‘ரிதமிக் பீட்ஸ்’ பெண்கள் வழங்கும் இசை நிகழ்ச்சி, பால விகாஸ் மாணவர்களின் நடனம் மற்றும் பஜனை-மங்களாரத்தி இடம்பெறுகிறது.





