புதுடில்லி: ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், க்யூ.ஆர். கோடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின்படி, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வரும் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு க்யூ.ஆர். கோடு கொண்ட புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். மூன்று அடுக்கு பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படும்; முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில், தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய புகைப்பட அடையாள அட்டையை பாதுகாப்புப் படையினர் நேரடியாகச் சரிபார்ப்பார்கள்.

ஓட்டு எண்ணும் அறைக்கு மிக அருகிலுள்ள மூன்றாம் அடுக்கில், க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள், ஓட்டு எண்ணும் ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணும் முகவர்கள் உள்ளிட்ட தேர்தல் கமிஷன் அங்கீகரித்தவர்களுக்கே இந்த அடையாள அட்டை வழங்கப்படும்.

செய்தியாளர்களுக்கான வசதியாக, ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கும் அருகில் ஊடக மையங்கள் அமைக்கப்படும் என்றும், தேர்தல் கமிஷன் வழங்கிய அதிகாரப்பூர்வ கடிதம் வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு வழக்கம் போல அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களில் இந்த முறை கட்டாயமாக பின்பற்றப்படும் எனவும், இதை தடையின்றி அமல்படுத்த பயிற்சி பெற்ற பணியாளர்களை நியமித்து தேவையான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.