புதுடில்லி: சமையல் எரிவாயு விலையில் ஏற்பட்ட கடும் உயர்வுக்குப் பிறகு, அடுத்ததாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளிலும் தாக்கம் ஏற்படலாம் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தலுக்குப் பிறகு பணவீக்கத்தின் தாக்கம் இருக்கும் என்று முன்பே கூறியதாக தெரிவித்தார். இன்று வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு எனவும் கூறினார்.
பிப்ரவரி முதல் தற்போது வரை வணிக சிலிண்டர் விலை ரூ.1,380 உயர்ந்துள்ளதாகவும், மூன்று மாதங்களில் 81 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேநீர் கடைகள், சாலையோர உணவகங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட பல சமையலறைகள் இந்த நெருக்கடியால் திணறுகின்றன என்றும், அதன் தாக்கம் இறுதியில் மக்களின் உணவுத் தட்டிலும் பிரதிபலிக்கும் என்றும் ராகுல் தெரிவித்தார்.





