புதுடில்லி: வெளிநாட்டில் சொத்துகளை வைத்திருப்பது பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாகக் கருதி, தங்க கையிருப்பின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரும் நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுவாக மத்திய வங்கிகள் தங்கள் நாட்டின் நாணயத்திற்கு ஆதாரமாக தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கும். அந்த வகையில் ஆர்பிஐயும் சந்தையில் வாங்கிய தங்கத்தை கையிருப்பாக வைத்துள்ளது. தகவலின்படி, மொத்தம் 880 மெட்ரிக் டன் தங்கம் ஆர்பிஐ கட்டுப்பாட்டில் பல இடங்களில் உள்ளது; இதில் பிரிட்டனின் பேங்க் ஆஃப் இங்கிலாந்திலும் கணிசமான அளவு இருந்தது.
சர்வதேச அரசியல்-பாதுகாப்பு சூழல் காரணமாக, வெளிநாடுகளில் தங்கம் மற்றும் அந்நியச் செலாவணி போன்ற கையிருப்புகளை வைத்திருப்பதில் அபாயம் அதிகரித்துள்ளதாக இந்த முடிவு விளக்கப்படுகிறது. 2023-ல் உக்ரைன் போர் தொடங்கியபோது ரஷ்யாவின் வெளிநாட்டு கையிருப்புகள் தொடர்பாக ஜி7 நாடுகள் எடுத்த நடவடிக்கைகள், மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் அந்நாட்டு அரசு கணக்கில் இருந்த கையிருப்புகள் வழங்கப்படாதது போன்ற நிகழ்வுகள் இதற்குக் காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, பிரிட்டன் வங்கியில் இருந்த தங்கத்தின் கணிசமான பகுதி இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2023 மார்சில் இந்தியாவில் வைத்திருந்த தங்கத்தின் பங்கு 37% ஆக இருந்த நிலையில், தற்போது அது 77% ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் 104 மெட்ரிக் டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 197 மெட்ரிக் டன் தங்கம் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வசம் இருப்பதால், அதையும் இந்தியாவுக்கு மாற்றும் முயற்சிகளை ஆர்பிஐ மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளும் மேற்கத்திய நாடுகளில் வைத்திருக்கும் தங்க கையிருப்புகளை தங்கள் நாட்டுக்குள் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





