நிலம் தொடர்பான தகராறுகளை தீர்ப்பளிக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கட்டாய சட்டக் கல்வி மற்றும் திட்டமிட்ட பயிற்சி வழங்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவில், மத்திய அரசிடம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனுவில், நாட்டில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளில் பெரும்பங்கு நிலத் தகராறுகளே என்பதையும், இத்தகைய முக்கியமான விவகாரங்களை முறையான சட்டக் கல்வி இல்லாத அதிகாரிகள் விசாரிப்பது சரியல்ல என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பட்டா, வாரிசுரிமை, சொத்துரிமை, நில ஆக்கிரமிப்பு போன்ற வழக்குகளை தற்போது வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் விசாரிப்பதாகவும், அவர்களுக்கு தேவையான சட்ட அல்லது நீதித்துறை பயிற்சி இல்லாததால் தீர்ப்புகள் முரண்பாடாகவும் பிழையுடனும் வருவதாகவும் மனுதாரர் வாதிட்டார்.

மேலும், நிலத் தகராறுகளை விசாரிக்க தனி நீதித்துறை சேவையை உருவாக்க வேண்டும்; குறைந்தபட்ச சட்டத் தகுதி மற்றும் உயர் நீதிமன்ற ஆலோசனையுடன் கூடிய கட்டாயப் பயிற்சியை அமல்படுத்த வேண்டும்; மாநில உயர் நீதிமன்றங்கள் இத்தகைய தீர்ப்புகளை கண்காணிக்கும் முறையும் கொண்டு வர வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி, இதில் எழுப்பப்பட்ட அம்சங்கள் முக்கியமானவை எனக் குறிப்பிட்டு, மத்திய அரசு பதில் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.