கருக்கலைப்புக்கான தற்போதைய 20 வார காலவரம்பை, குறிப்பாக பாலியல் வன்கொடுமையால் ஏற்பட்ட கர்ப்பங்களில், மாற்றி அமைக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. சிறுமி உள்ளிட்ட எந்தப் பெண்ணையும், அவரது விருப்பத்திற்கு மாறாக கருவை சுமக்க நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
15 வயது சிறுமி கருக்கலைப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, பிறக்கவுள்ள குழந்தையின் நலனை விட கருவை சுமக்கும் சிறுமியின் நலனே முதன்மை என நீதிமன்றம் வலியுறுத்தியது. தேவையற்ற கர்ப்பத்தை தொடரச் சொல்லுவது பெண்ணின் அடிப்படை உரிமையை பறிப்பதற்கு ஒப்பானது என்றும் குறிப்பிட்டது.
இந்த வழக்கில், 28 வார கருவை கலைக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவ வேண்டும் என்று நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கரு முழு வளர்ச்சி அடைந்த நிலையில் இப்போது கருக்கலைப்பு செய்தால் சிறுமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என கூறி, எய்ம்ஸ் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, காலத்திற்கேற்ப சட்டங்களும் மாற வேண்டும் என்றும், இத்தகைய வழக்குகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க உதவும் வகையில் உடனடி சட்டத் திருத்தம் தேவை என்றும் தெரிவித்தது. விசாரணை நடைமுறைகளால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் மனஅழுத்தம் அடையக் கூடாது என்றும், தாய்க்கு நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் கருக்கலைப்பை அனுமதிக்கலாம் என்றும் கூறியது.
எய்ம்ஸ் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், கருக்கலைப்பு செய்தால் வாழ்நாள் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்; எதிர்காலத்தில் தாயாகும் வாய்ப்பும் பாதிக்கலாம் என வாதிட்டு, குழந்தை பெற்றெடுத்து பின்னர் தத்துக்கொடுக்கலாம் என பரிந்துரைத்தார். இதை நீதிமன்றம் ஏற்காமல், மருத்துவ விளைவுகளை சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் விளக்கி கூறி, முடிவெடுக்கும் உரிமையை அவர்களிடமே விட வேண்டும்; எந்த முடிவையும் திணிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.





