சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ‘மதச்சார்பற்ற சோஷியலிச காங்கிரஸ்’ என்ற புதிய கட்சி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
தகவலின்படி, வரவிருக்கும் தேர்தலில் த.வெ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசின் சில தலைவர்களும் பல தொண்டர்களும் வலியுறுத்தினர். ஆனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தொடர முடிவு செய்ததைத் தொடர்ந்து, சில நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு ஏமாந்ததாக கூறப்படும் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன், முன்னாள் மகளிர் அணி தலைவர் ஹசீனா சையத், மகாத்மா சீனிவாசன் உள்ளிட்டோர் காங்கிரசிலிருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் மகாத்மா சீனிவாசன் தற்போது ‘மதச்சார்பற்ற சோஷியலிச காங்கிரஸ்’ கட்சியை தொடங்கி, புதன்கிழமை சென்னையில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். காங்கிரசில் 30 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்றும், ராகுலைச் சுற்றியுள்ளவர்கள் பணத்திற்காக சீட்களை விற்றதாகவும் அவர் குற்றம்சாட்டி, அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து சமூக நீதிக்காக பாடுபடுவோம் என்றும் கூறினார்.





