சென்னை: தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு இன்னும் 2–3 நாட்களில் “நல்ல செய்தி” வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணில் அவர் மரியாதை செலுத்தினார். மே தினம் என்பது தொழிலாளர்களின் உரிமைகளையும், உழைப்புக்கு ஏற்ற நியாயமான ஊதியத்தையும் வலியுறுத்தும் நாளாகக் கொண்டாடப்படுவதாக அவர் கூறினார்.
இந்தியாவில் மே முதல் நாள் விழா முதலில் சென்னையில்தான் தொடங்கியதாக குறிப்பிட்ட முதல்வர், திமுகவினர் செய்த உழைப்பின் பலனை மே 4ஆம் தேதி பெற இருப்பதாகவும், அதில் “துளியும் மாற்றமில்லை” என்றும் தெரிவித்தார்.
தன் கருத்துகள் கருத்துக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என யாரும் நினைக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார். மேலும், திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத் திட்டங்கள் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





