தாட்கோ அதிகாரிகள் ஒப்பந்தத் தொகையில் கமிஷன் கேட்டதாக கூறி, மதுரையைச் சேர்ந்த பெண் சிவில் ஒப்பந்ததாரர் ஒருவர் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசில் (DVAC) புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள், தண்ணீர் தொட்டிகள், அறிவுசார் மையங்கள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளுக்கான டெண்டர்களில் எஸ்.சி./எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அரசாணை இருந்தும், அதிகாரிகள் சிலருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
புகார் அளித்துள்ள கயல்விழி கூறுகையில், 2024–2025 நிதியாண்டில் தாட்கோவில் சிவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்து திருப்பரங்குன்றம், மாடக்குளம் பகுதிகளில் பணிகளை நிறைவு செய்ததாக தெரிவித்துள்ளார். மாடக்குளம் விடுதி பணிக்கான ₹55 லட்சம் கட்டுமானத் தொகையில் 10% தொகையை “எம் செட்டில்மென்ட்” என்ற பெயரில் தலைமைப் பொறியாளர் அன்பு தேவகுமாரி கேட்டதாகவும், அது “மினிஸ்டர் செட்டில்மென்ட்” என விளக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
லஞ்சம் தர மறுத்ததால் இறுதி பில் வழங்காமல் நிறுத்தி வைத்ததாகவும், ₹5.5 லட்சம் தரவில்லை என்றால் அடுத்த பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கமாட்டோம் என மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு கிடைத்ததாகவும், அதையும் அதிகாரிகள் பின்பற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நிர்வாக இயக்குநர் கந்தசாமி, தலைமைப் பொறியாளர் அன்பு தேவகுமாரி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது.





