த.வெ.க. பக்கம் கட்சியினர் நகர்வதைத் தடுக்க, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்த, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சோனியா காந்தியை சந்திக்கத் தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் உறுதியாகி உள்ள நிலையில், முன்னாள் மாநிலத் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் அந்தப் பதவிக்காக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தமிழகத்தில் இளைஞர் ஒருவரை தலைவராக நியமிக்க ராகுல் தரப்பு திட்டமிட்டு, சிலரிடம் தொலைபேசி வழியாக கருத்துக் கேட்பு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்சுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் முடிவுக்குப் பிறகு த.வெ.க.வில் இணைந்தால் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி எளிதாகும் என்ற கணக்கில், மாவட்ட அளவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தயாராகி வருவதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.

இந்த சூழலில், முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம் இல்லத்தில் நடந்த ரகசிய ஆலோசனைக்குப் பிறகு, சுமார் 25 பேர் டில்லி சென்று மேலிடத்திடம் கோரிக்கைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளனர். ராகுல் காந்தி தேசியத் தலைவராக பொறுப்பேற்க வேண்டும், தமிழகத்தில் புதிய தலைவர் மற்றும் ஐந்து செயல் தலைவர்கள் நியமிக்க வேண்டும், அதில் எம்.பி.க்கள் இடம்பெறக் கூடாது, “ஒருவருக்கு ஒரு பதவி” என்ற நடைமுறை அமல்படுத்த வேண்டும் என்பவற்றை சோனியா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.