பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களில் கண்டுபிடிக்கப்பட்ட முரண்பாடுகள் மற்றும் மதிப்பெண் வேறுபாடுகள் தொடர்பாக தமிழக தேர்வுத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. சந்தேகம் உள்ள வழக்குகளில் தொடர்புடைய மாணவர்களின் தேர்ச்சி முடிவை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 27 வரை நடைபெற்றது; ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். பிளஸ் 1 அரியர் தேர்வையும் சிலர் எழுதிய நிலையில், அவற்றின் விடைத்தாள்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட முகாம்களில் ஏப். 4 முதல் 20 வரை மதிப்பீடு செய்யப்பட்டது.

மதிப்பீடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த ஆய்வுகளில், விடைத்தாளில் உரிய முத்திரை இல்லாமை, ஒரே விடைத்தாளில் சில பக்கங்களில் கையெழுத்து மாறுபாடு, முதன்மை கண்காணிப்பாளர் கையெழுத்து இல்லாமை, சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருத்தல், பக்கம் வாரியாக மதிப்பெண் பதிவு செய்வதில் ஆசிரியர்களின் கவனக்குறைவு போன்றவை கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட தேர்வர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக சென்னையில் தேர்வுத்துறை அலுவலகத்தில் ஏப். 28 அன்று மேல்நிலைப் பள்ளிகளுக்கான இணை இயக்குநர் முன்னிலையில் 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தாண்டு முதல்முறையாக ‘ரேண்டம்’ ஆய்வில் இத்தகைய முரண்பாடுகள் வெளிப்பட்டதாக ஒரு உயர் அதிகாரி கூறினார். இதனால் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் இருக்காது; மே 6ல் வெளியிடப்படும் என்றும், சந்தேகம் உள்ள மாணவர்களின் முடிவுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.