செங்கல்பட்டு திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 10 பிரபல கோவில்களின் ரத வீதிகளில், தரைக்கீழ் கேபிள் மூலம் மின்சாரம் வழங்கும் பணிகளை தமிழக மின் வாரியம் தொடங்க உள்ளது.
பல பகுதிகளில் மேல்நிலை மின் கம்பிகள் வழியாக மின்சாரம் வழங்கப்படுவதால், மழை மற்றும் புயல் நேரங்களில் கம்பிகள் அறுந்து விழும் சூழல் ஏற்பட்டு மின் தடை மற்றும் விபத்து அபாயம் அதிகரிக்கிறது. தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிகளில் கூடுகின்றனர்.
இந்த நேரங்களில் மக்களின் பாதுகாப்புக்காக ரத வீதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் நடைமுறை உள்ளது. இதனால் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வாக, மேல்நிலை கம்பிகளுக்கு பதிலாக தரைக்கீழ் கேபிள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவாரூர் மாவட்ட மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில், தஞ்சை திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வர சுவாமி கோவில், ராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில், சிவகங்கை காளையார் கோவில், சொர்ணகாளீஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட இடங்களில் கேபிள் புதைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளன.
மேலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலும் மின் கம்பங்களை அகற்றி கேபிள் வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மேற்கு மற்றும் வடக்கு வீதிகள், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட 16 கோவில்களின் ரத வீதிகளில் தரைக்கீழ் கேபிள் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது; மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 11 கோவில்களில் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.





