இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை அமைப்பு (யுபிஐ) இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில், யுபிஐ உலகின் மிகப்பெரிய உடனடி (ரியல்-டைம்) பணப்பரிவர்த்தனைத் தளமாக வளர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் பரிவர்த்தனை எண்ணிக்கை சுமார் 12,000 மடங்கு உயர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டில் மட்டும் யுபிஐ வழியாக நடந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 700க்கும் மேற்பட்ட வங்கிகள் யுபிஐ வசதியைப் பயன்படுத்துவதால், மொத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சுமார் 49% யுபிஐ வாயிலாக நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-17 நிதியாண்டில் சுமார் 2 கோடியாக இருந்த பரிவர்த்தனை எண்ணிக்கை, 2025-26ல் 24,162 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் பரிவர்த்தனை மதிப்பு ரூ.0.07 லட்சம் கோடியிலிருந்து ரூ.314 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், யுபிஐ முறையை உலகின் மிகப்பெரிய விரைவான பணம் செலுத்தும் அமைப்பாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) அங்கீகரித்துள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.





