தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சில தி.மு.க. நிர்வாகிகள், கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடையக் கூடும் என்பதற்குக் காரணமாக ஒரு அமைச்சரின் செயல்பாடுகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புகாரில் கூறப்பட்டதாவது: தி.மு.க. கூட்டணி சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரின் தேர்தல் பணிக்கு தி.மு.க. நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலராக உள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்யாமல் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத் தொகுதிகளில் பிரசாரம் செய்ததாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அ.தி.மு.க. வேட்பாளர் சண்முநாதனுக்கு ஆதரவாக செயல்பட்டு, கட்சியினரையும் அவருக்காக பிரசாரம் செய்ய உத்தரவிட்டதாகவும், இது அமிர்தராஜுக்கு எதிரான “உள்ளடி வேலை” எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் திறம்பட பணியாற்றவும் இடமளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமிர்தராஜ் தோல்வியடைய வாய்ப்புள்ளதாக தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், அப்படி நடந்தால் முழுப் பொறுப்பும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையே சாரும் என்றும் அந்த புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




