புதுடில்லி: மேற்கு வங்கத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கான பணியாளர்களை தேர்வு செய்வதில் இந்திய தேர்தல் கமிஷனுக்கு (ECI) அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓட்டு எண்ணும் பணிக்கான பணியாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் கமிஷன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

அந்த சுற்றறிக்கையை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, திரிணமுல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவசரமாக விசாரிக்க கோரியது.

நீதிபதிகள் பி.எஸ். சர்மா மற்றும் ஜாய்மால்யா பாக்சி அடங்கிய சிறப்பு அமர்வு, ஓட்டு எண்ணும் பணியாளர்களை தேர்தல் கமிஷன் தேர்வு செய்யலாம்; இதை சட்டவிரோதம் என்று கூற முடியாது என்று தெரிவித்தது.

மேலும், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர் மற்றும் ஓட்டு எண்ணிக்கை முகவர் மத்திய அரசு அதிகாரிகளாக இருந்தாலும், அந்த காரணம் மட்டும் கொண்டு சுற்றறிக்கையை ரத்து செய்ய முடியாது என்றும் அமர்வு குறிப்பிட்டது.