சட்டசபை தேர்தல் முடிவுகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க, மொபைல் செயலி வழியாக தகவல் வெளியிட தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில், மே 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்று காலை 8:00 மணிக்கு எண்ணிக்கை தொடங்கும்.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை முடிவுகள் தொடர்பான விவரங்கள் தேர்தல் கமிஷன் இணையதளத்தில் மட்டும் வெளியான நிலையில், இம்முறை ‘ECINET’ என்ற மொபைல் செயலியிலும் வெளியிடப்பட உள்ளது.

செயலியில் மாநில வாரியாகவும் தொகுதி வாரியாகவும் முன்னணி நிலவரங்கள் உடனுக்குடன் காட்டப்படும். மேலும் மாநிலம், மாவட்டம் வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் போன்ற தகவல்கள் ஏற்கனவே செயலியில் வெளியிடப்பட்டுள்ளன.