டெஹ்ரான்: ஈரானின் உச்ச தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், மொஜ்தபா கமேனி நலமாக இருப்பதாகவும், நாட்டின் அன்றாட நிர்வாகப் பணிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறி, அவரது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை மறுத்துள்ளார்.

சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைத் தலைவர் என குறிப்பிடப்படும் அயதுல்லா மொஹ்சென் கோமி, மொஜ்தபாவின் உடல்நலம் குறித்து வெளியாகும் தகவல்கள் “முழுமையாக தவறானவை” என தெரிவித்தார். அவர் பொதுவெளியில் தோன்றாவிட்டாலும், முக்கிய பேச்சுவார்த்தைகள் மற்றும் கள நிலவரங்களை நேரடியாக கண்காணிக்கிறார் என்றும் கூறினார்.

பிப்.28 அன்று நடந்த தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் கட்டடத்தின் முற்றத்துக்கு சென்றதால் மொஜ்தபா உயிர்தப்பியதாக கோமி தெரிவித்தார். மேலும், அமைதி பேச்சுக்கான குழுவிற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளையும் அவர் வழங்கி வருவதாகவும் கூறினார்.

இந்த வதந்திகளை “எதிரிகள்” திட்டமிட்டு பரப்பி சதி நடவடிக்கைகளை முன்னெடுக்க முயல்கிறார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார். சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மொஜ்தபா உயிருடன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை என கூறியதற்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த விளக்கம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.