மத்திய பிரதேசம் ஜபல்பூரில் பார்கி அணை அருகே நர்மதை ஆற்றில் இயக்கப்பட்ட சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

தகவலின்படி, 29 பயணியர்கள் மற்றும் இரண்டு ஊழியர்களுடன் படகு நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஆற்றில் சென்றது. ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றபோது திடீரென சூறாவளி காற்று வீசியதால் பயணியர்கள் அச்சத்தில் அலறினர்.

தப்பியவர்கள் கூறுகையில், கரையை நோக்கி படகை திருப்புமாறு அவர்கள் கூச்சலிட்டாலும், படகின் சத்தம் காரணமாக ஊழியர்களுக்கு அது கேட்கவில்லை என தெரிவித்தனர். காற்றின் வேகத்தில் படகு திசை மாறி சென்ற நிலையில், திடீரென கவிழ்ந்ததாகவும் கூறினர்.

சிலர் லைப் ஜாக்கெட் அணிந்து தண்ணீரில் மிதந்து தப்ப முயன்றாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டன. உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக செயல்பட்டு 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர். இரவு 9 மணியளவில் நான்கு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பல மணி நேர தேடுதலுக்குப் பின் மேலும் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

மீட்புப் பணியின் போது ஒரே லைப் ஜாக்கெட்டில் இணைக்கப்பட்ட நிலையில் தாய் மற்றும் அவரது 4 வயது மகனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது. சம்பவ இடத்தை பார்வையிட்ட மாநில அமைச்சர் ராகேஷ் சிங், மீட்புப் பணியை விரைவுபடுத்த அறிவுறுத்தியதுடன், மீட்பு முழுமையடைந்த பின் விபத்து காரணம் தெளிவாகும் என்றும் விசாரணை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.