தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக–கேரள எல்லையில், விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவுக்கு தமிழகமும் கேரளமும் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் திரண்டனர்.

கோவிலுக்கு குமுளி வழியாக கேரள வனப்பகுதியில் 14 கி.மீ. ஜீப் பாதை உள்ளது. தமிழக வனப்பகுதியில் பளியன்குடி–தெள்ளுக்குடி வழியாக நடைபாதையும் உள்ளது. விழா நாளில் கண்ணகி பச்சை நிற பட்டுடுத்தி அருள் பாலித்ததாகவும், தமிழக பூசாரி ராஜலிங்கம் பூஜை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக பக்தர்கள் வந்த நிலையில், குமுளி வழியாக கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட ஜீப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைக்கப்பட்டதாக பக்தர்கள் கூறினர். இதனால் தரிசனம் முடித்து திரும்புவதில் பலர் சிரமம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.

மேலும், கோவில் வளாகத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர் பொங்கல் வைக்க முயன்றபோது, அனுமதி இல்லை எனக் கூறி கேரள போலீசார் தடுத்தனர். இரு மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை என தமிழக அதிகாரிகள் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்த பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், தரிசனம் முடித்து கோவில் வளாகத்தில் இளைப்பாறிய பக்தர்களை மதியம் 12 மணிக்கே வெளியேறுமாறு கேரள போலீசார் கெடுபிடி காட்டியதாகவும், இதனால் பக்தர்கள் வேதனை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.