கோடை விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கொடைக்கானலில் பிரபலமான சில சுற்றுலா தளங்களுக்கு இரண்டு நாட்கள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படாது என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, சுற்றுலா தளங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மே 2 (சனிக்கிழமை) மற்றும் மே 3 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களிலும் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக் காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு கட்டணமின்றி சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





