கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஓட்டு எண்ணும் மையத்தில் தபால் ஓட்டுகள் தொடர்பாக முறைகேடு நடப்பதாக திரிணமுல் காங்கிரஸ் (திரிணமுல்) குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, கொல்கட்டாவில் நள்ளிரவில் நடந்த தர்ணா பரபரப்பை ஏற்படுத்தியது.

வட கொல்கட்டா சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள குதிராம் அனுஷிலன் கேந்திரா மையமே சர்ச்சையின் மையமாக இருந்தது. அங்கு பாதுகாப்பு பகுதிக்குள் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் சிலர் நடமாடுவதாகக் கூறி, திரிணமுல் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது.

இதையடுத்து வேட்பாளர்கள் சசி பாஞ்சா, குணால் கோஷ் ஆகியோர் மையத்துக்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். தாங்கள் வெளியேறிய பின் மாலை 4 மணியளவில் EVM அறை மீண்டும் திறக்கப்பட்டதாகவும், உள்ளே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் குணால் கோஷ் குற்றம்சாட்டினார்.

முதல்வர் மம்தா பானர்ஜி அந்த மையத்துக்கு வருவதாக தகவல் பரவியதால் தொண்டர்கள் அதிகளவில் கூடினர். ஆனால் அவர் தெற்கு கொல்கட்டாவின் சகாவத் மெமோரியல் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறைக்கு சென்று சுமார் நான்கு மணி நேரம் கண்காணிப்பில் இருந்தார்.

பின்னர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் செய்தியாளர்களிடம், விதிகளின்படி பாதுகாப்பு அறைக்குள் மின் இணைப்பு இருக்கக் கூடாது என்பதால் அதிகாரிகள் டார்ச் லைட்டை பயன்படுத்தியதாக விளக்கம் அளித்தார். சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் EVM அறையில் அல்ல; தபால் ஓட்டுகள் பிரிக்கப்படும் பகுதியில் தான் என்றும், அந்தப் பணி மாலை 4 மணிக்கு தொடங்கும் தகவல் அனைத்து கட்சிகளுக்கும் காலைவேளையிலேயே இ-மெயிலில் அனுப்பப்பட்டதாகவும் கூறினார். இதையடுத்து வட கொல்கட்டா மையத்தில் நடந்த போராட்டம் தணிந்தது; மேலும் கொல்கட்டாவின் ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.