மதுரை சித்திரைத் திருவிழாவில் நேற்று அதிகாலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது, பக்தர்கள் திரண்டிருந்த பகுதியில் சிலர் காலணிகளை வீசியதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
கள்ளழகர் வைகை எழுந்தருளும் நிகழ்வு பலருக்கும் உணர்வுப்பூர்வமான வழிபாட்டு தருணமாகக் கருதப்படுகிறது. பல ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் அதிகாலை முதலே வைகை கரையில் காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள். நேர்த்திக்கடனாக தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி நீரைப் பீய்ச்சி அடிப்பதும் வழக்கமாக உள்ளது.
கடந்தாண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத் தலைவர் சுந்தரவடிவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கள்ளழகர் வைகையில் இறங்கும் போது பக்தர்கள் மீது காலணிகள் வீசுவது போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து கைது செய்ய போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி எல். விக்டோரியா கவுரி உத்தரவிட்டிருந்தார்.
இந்தாண்டு நிகழ்வுக்காக 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சம்பவம் மீண்டும் நடந்ததாக கூறிய பக்தர்கள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
சுந்தரவடிவேல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய இளைஞர்கள் துணை நிற்க வேண்டும் என்றும், ஒருவர் மீது செருப்பு விழுவது அவரது கவுரவத்தை பாதிப்பதாகவும் கூறினார். உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், ஆதாரங்களைத் திரட்டி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்படும்; தவறு செய்தோரை கைது செய்யும் வரை நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.





