நீட் நுழைவுத் தேர்வு எழுதும் தேர்வர்கள் முழுக்கை ஆடைகளை அணியலாம் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது. இவ்வாறு அணிந்து வருபவர்கள் பாதுகாப்புச் சோதனை முடிக்க தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு மே 3 அன்று நாடு முழுவதும் 552 மையங்களில் நடத்தப்படுகிறது.

நாடு முழுதும் 22.79 லட்சம் மாணவ-மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர்; சென்னையில் 43 மையங்களில் 21,000க்கும் அதிகமானோர் தேர்வு எழுத உள்ளனர்.

என்.டி.ஏ. வெளியிட்ட வழிமுறைகளின்படி, தேர்வர்கள் தெளிவான (டிரான்ஸ்பரண்ட்) தண்ணீர் பாட்டிலை கொண்டு வர வேண்டும். நம்பிக்கை சார்ந்த பொருட்கள் மற்றும் ஆடைகள் அணிய அனுமதி உண்டு; ஆனால் சோதனைக்காக முன்கூட்டியே வர வேண்டும்.

மேலும், மெல்லிய ஆடைகள் அணியலாம்; முழுக்கை மற்றும் கம்பளி உடைகளும் அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண காலணிகளை அணிந்து வர வேண்டும். விளக்கம் பெற 011-40759000, 011-69227700 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.