புதுடில்லி: இன்டர்போல் அமைப்புடன் இணைந்து, வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கைகளை இந்திய பாதுகாப்பு மற்றும் விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த முயற்சிக்கு ‘ஆப்பரேஷன் குளோபல் ஹன்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இன்டர்போல் உதவியுடன் வெளிநாடுகளில் தப்பியோடியவர்களை கண்டுபிடித்து கைது செய்வது, அந்நாட்டு அரசுகளுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நாடு கடத்தல் நடைமுறைகளை முடிப்பது, பின்னர் சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவது ஆகியவை முக்கிய நோக்கங்களாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி என கூறப்படும் சலீம் டோலா துருக்கியில் கைது செய்யப்பட்டார். அவரை துருக்கி அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தியதாக விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
சர்வதேச போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் விநியோகத்தை ஒருங்கிணைப்பதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் முக்கியமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஜஸ்விந்தர் சிங் மற்றும் சன்னி கல்ரா ஆகியோர் துபாய் போலீசிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





